அந்திய காலம் அமைதியான காலமா?

 

கடமைகள் முடித்துக் கால்நீட்டி சுகமாகக்

காலம் களிக்கும் வாழ்க்கை முதுமை

வாழ்க்கை என்ற ஒரு நோக்கம்.

 

ஆகையால், முதுமை என்னும் அந்திய

வாழ்க்கை அமைதியான

வாழ்க்கை என்று பலருக்கு ஒரு எண்ணம்.

ஆனால், இதோ!

 

* காசு இல்லாது கஞ்சிக்குத் தவிக்கும் முதியோர் பலர்.

* காசு இருந்தும் காவலுக்கு எவரும் இல்லாது தவிக்கும் சிலர்.

* கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தாலும் கூழுக்கு எதிர்பார்த்து

  வாழ்பவர்களும் சிலர் உண்டு.

* பல் இல்லாத பொக்கை வாயில் பொரிதின்று காலம்

  கடத்துபவர்கள் உண்டு.

* பழைய நினைவுகளில் புதைந்து

  வெறும் வாயை மெல்லும் சிலர் உண்டு.

* எதிர்காலத்தில் எதிர்பார்ப்பது எதை?

  எதிர்ப்பது எப்படி என்று எண்ணி ஏங்கும் பலர் உண்டு.

* பெற்றெடுத்துப் பேணிய மக்கள் இருப்பினும், மேல் நாட்டுக்கு

  அவர்கள் சென்று துணையின்றித் தவிக்கும் சிலர், மலடியே

  மேல் என்று நொந்து கொள்பவரும் உண்டு.

*  தரையில் நடக்க தள்ளாடும் சிலர்.

* இருமலில் இருட்டு அறையில் படுத்து இரவெல்லாம்

  உறக்கமின்றி இறுதி நாட்கள் நோக்கிக் கிடப்பவர்கள் சிலர்.

* கண்புரையும் திரையும் விழுந்து, கண் இருந்தும்

  குருடனாகக் காலம் கடத்துவர் சிலர்.

* நினைவு இழந்து நிலை தெரியாது நிற்பவர் சிலர்.

* மூட்டுவலியால் முடங்கி கிடக்கும் முதியவர் சிலர்.

* இடுப்பு வலியில் இருக்கையில் இருக்க

  இயலாமையால் வருந்துபவர்கள் உண்டு.

* பிள்ளைகளின் கல்லூரி செலவும் கல்யாண செலவும் போக

  கையிருப்பைக் கைப்பிடித்தவளின் காசநோய்க்குச் செலவழித்து,

  காசு இல்லாமல் கஞ்சிக்குத் திண்டாடுபவர்களும் உண்டு.

* நாலு பிள்ளைகள் இருப்பினும் நாலு மாதத்திற்கு ஒரு இடம்

  மாற்றி, சதுரங்க காய்களாக வாழ்க்கை நடத்தும்

  முதியவர்களும் உண்டு.

* உண்ட உணவும் உடுத்திய ஆடையும்

  உணர முடியாது இருக்கும் சிலர்.

* காசோலைக்குக் கையெழுத்து இடக்கூட

  கைநடுங்குவது பலருக்கும் உண்டு.

* "நாகாக்க, காவாக்கால், சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு"

  என்ற குரலுக்கேற்ப, சுவை - சொல் இரண்டும் கட்டுப்படாது

  இகழ்ச்சி படுபவர்களும் உண்டு.

* இளைய சொந்தபந்தங்கள் தன்பின்னே பிறப்பினும்

  தன் கண்முன்னே இறப்பதைக் கண்டு

  கண்ணீர் விடுபவர்கள் சிலர் உண்டு.

* செயலற்ற செவி பயனற்ற உடல் இருந்து படுக்கையில்

  படுத்தும் பசி, பற்று, பாசம் சிலருக்கு உண்டு.

* மல ஜலம், கழிவு தன் வசம் இல்லாது,

  மாற்று ஆடை உடுத்த மற்றவர்களின் உதவி எதிர்பார்த்து,

  தன் ஊழ்வினையின் பயனை உணர்ந்து,

  நொந்துகொள்பவர்களும் பலர்.

* சர்க்கரை நோய் முற்றி ரத்தம் சுத்தம் செய்ய

  ஆஸ்பத்திரி தினம் விஜயம் செய்பவர்களும் உண்டு.

* மூன்று பிள்ளைகளை பெற்று எடுத்து, பேணி

  வளர்த்தவர் முதியோர் இல்லத்தில் இப்போது

  வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு.

* முப்பது பவுன் விற்று மகளுக்கு மருத்துவப்படிப்பு படிக்க

  வைத்தவள், இப்போது மூச்சுமுட்டு வியாதியால்

  முனகிப்படுத்திருப்பவர் பலர் உண்டு.

 

முடிவில்,

எல்லாவற்றிற்கும் மேலாக தனிமையில் வாழும்

பட்டுபோன தனி மரம் அவன்/அவள்.

 

அந்திய வாழ்க்கை அமைதியான வாழ்க்கையா?

நீங்களே சொல்லுங்கள்!


பீமாச்சார்

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்