கடவுள் எப்போது சிரித்தான்?

 

இரண்டு கையில்லாத முடவன்

கண் பார்வையற்றவன் கால் தடுக்கி

விழுவதைப்பார்த்துச் சிரித்தான்.

அதே கண்ணிலாதவன் கையில்லாத முடவனுக்கு

தன் கையினால் எடுத்து கஞ்சி ஊட்டுவதைப்

பார்த்து, "கடவுள் சிரித்தான்".

 

நோயாளியின் உயிரைக் காப்பாற்ற உறுதியளித்த

வைத்தியர் மறுநாளே உயிர் பிரிந்ததைப் பார்த்து,

"கடவுள் சிரித்தான்".

 

மக்கட்பேறு இல்லாதவளை இவள் மலடி என்று

பரிகசித்தாள், ஆனால்

 

இவள் நோயுற்று படுக்கையில் படுத்திருக்க,

தான் பெற்ற பாலகனுக்குப் பாலூட்ட இயலாதபோது

அந்த மலடி தன் மடியில் பாலாடை கொண்டு

பாலூட்டியதைப் பார்த்து, "கடவுள் சிரித்தான்".

 

கொடிய பாவம் செய்து கோடி பணம் சேர்த்த

கோடிஸ்வரன் கோடி வீட்டு ஏழை

கோபாலனைப் பார்த்து கேலி செய்தான்!

 

அதே கோடிஸ்வரன் இறந்தபொழுது

கோடி வீட்டு கோபாலன்

அவனை நாலில் ஒருவனாகத் தோள்கொடுத்து, தூக்கிச்

செல்வதைப் பார்த்து, "கடவுள் "சிரித்தான்".

 

பாவங்கள் பல செய்து பலரை ஏமாற்றிப்

பணம் குவித்தவன், அவன் திருப்பதி உண்டியலில்

பாதி பணத்தைப் பகிர்ந்து கொடுத்து பாவங்களைப்

போக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைப்

பார்த்து "கடவுள் சிரித்தான்".

'அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம்' என்ற செய்யுளுக்கு

அர்த்தம் தெரியாத மாணாக்கனை ஆசிரியர்

சினத்துடன் கன்னத்திலறைந்து அறைக்கு வெளியே

தள்ளிதைப் பார்த்து "கடவுள் சிரித்தான்".

 

வாழைப்பூவை நோக்கி மற்ற பூக்கள்,

எங்களைப்போல மாலையாக தொடுத்து

தெய்வங்களுக்குச் சூட்ட அறுகதையற்றவன் என்று

கேலிச் சிறுப்புடன் பரிகசித்தன.

 

ஆனால், அந்த பூக்கள் மாலையாகத் தொடுக்கப்படுவது

வாழை நார் கொண்டுதான் என்பதைக்கண்டு

"கடவுள் சிரித்தான்".

 

அது ஒன்று, இல்லை இரண்டு, இல்லை மூன்று,

"நீயே தான் அது", "நானே பிரம்மம்"

"கடவுள் ஒருவரே", என்று போலி அறிஞர்கள்

பல சொற்களைக் கொண்டு "பரமனை" பாமர மக்களுக்கு

விளக்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்து

"கடவுள் சிரித்தான்".

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்